பா.ம.க., தோல்விக்கு காரணம் என்ன? கைகொடுக்காத ஜாதிய ஓட்டுக்கள்
பா.ம.க., தோல்விக்கு காரணம் என்ன? கைகொடுக்காத ஜாதிய ஓட்டுக்கள்
பா.ம.க., தோல்விக்கு காரணம் என்ன? கைகொடுக்காத ஜாதிய ஓட்டுக்கள்
ADDED : மார் 31, 2010 12:42 AM

தர்மபுரி: "பென்னாகரம் தொகுதியில் வன்னியர்கள் அதிகம் இருப்பதால், வெற்றி பெறுவோம்' என, கூறி தனித்து போட்டியிட்ட பா.ம.க., இரண்டாவது இடத்தை மட்டுமே பெற முடிந்தது.தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களை பா.ம.க., புறக்கணித்தது.
பென்னாகரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியண்ணன் இறந்தவுடன் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பா.ம.க.,வினர் தொகுதியில் முகாமிட்டனர்.பென்னாகரம் தொகுதியில் 68 சதம் வன்னியர்கள் இருப்பதாலும், 1996ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் கிடைத்தது. அதை காரணமாக வைத்து இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவோடு தேர்தல் பணிகளில் களம் இறங்கினர்.கடந்தாண்டு டிசம்பரில் இருந்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் தொகுதியில் முகாமிட்டு, நான்கு மாதங்கள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர்.வன்னியர் சங்கம் துவங்கப்பட்ட போது, வீடு, வீடாக சென்றது போல் இடைத்தேர்தலில் ஓட்டு கேட்டு வந்தனர். தொகுதியில் உள்ள 210 கிராமங்களில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒரு கிராமத்துக்கு மூன்று முறைக்கு மேல் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்."கடைசி வரையில் வெற்றி தங்களுக்கே' என, கூறி வந்த நிலையில், தேர்தல் முடிவு பா.ம.க.,வுக்கு இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.தொகுதியில் வலம் வந்த ராமதாஸ், "பா.ம.க.,வுக்கு ஓட்டுப்போடதவர்கள் யாரும்வன்னியர் இல்லை; பணத்தை வாங்கி கொண்டு இந்த முறை பா.ம.க.,வுக்கு ஓட்டு போடுங்கள்' என, வன்னியர் மக்களிடம் பிரச்சாரம் செய்தார். இது பா.ம.க.,வுக்கு எதிர்மறையான முடிவை கொடுத்துள்ளது.கடந்த 1996 மற்றும் 2001ம் ஆண்டில் பா.ம.க., மாநில தலைவர் மணி இத்தொகுதியில் வெற்றி பெற்ற போதும், தொகுதியில் பத்தாண்டுகள் குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த பணிகளையும் அவர் செய்யவில்லை.குறிப்பாக அவர் கட்சியின் மாநில பொறுப்பில் இருந்ததால், கட்சி பணிக்கு முழு நேரமும் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. வெற்றி பெற்ற பின் தொகுதிக்கும் அதிகம் வரவில்லை.வன்னிய மக்களுக்காக குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த வேலைகளையும் அவர் செய்து கொடுக்கவில்லை. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் குறிப்பாக குடிநீர் திட்டத்தை பற்றி தொகுதி முழுவதும் ஆளுங்கட்சிக்கு எதிராக பா.ம.க.,வினர் பிரச்சாரம் செய்த போதும், "இவர்கள் பொறுப்பில் இருந்த போது, என்ன செய்தார்கள்?' என்ற கேள்வியும் வன்னியர் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.தொகுதியில் முகாமிட்டு இருந்த ராமதாஸ், அன்புமணி ஆகியோர், "வன்னியர் ஓட்டுக்கள் அன்னியர்களுக்கு இல்லை' என்ற கோஷத்தை முன் வைத்தனர்.பிற அரசியல் கட்சியினர், "நீங்கள் ராமதாஸ் சொல்வதை போல் வன்னியருக்கு ஓட்டு போடுங்கள் எங்கள் கட்சியிலும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரே நிற்கிறார்' என, கூறி பிரச்சாரம் செய்தது வன்னியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.பா.ம.க.,வினர் முழுக்க, முழுக்க வன்னியர் மக்கள் இருக்கும் கிராமங்களில் மட்டுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இது தொகுதியில் உள்ள 32 சதவீத பிற சமூக மக்களிடமும், நடுநிலையாளர்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தியது.மேலும் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் உள்ள பா.ம.க.,வினர் கிராம பகுதியின் வளர்ச்சிக்கு எந்த பணிகளையும் செய்யாததும் பா.ம.க.,வுக்கு பின்னடைவை தேர்தல் முடிவு கொடுத்துள்ளது.கடைசி நேரத்தில் பா.ம.க., வினர் தங்கள் கட்சியினர் 70 ஆயிரம் பேருக்கு கொடுத்த, "கோல்டு காயினை' சத்தம் இல்லாமல் கொடுத்ததால் மட்டுமே இரண்டாம் இடத்தை தக்க வைக்க முடிந்தது.அ.தி.மு.க.,வினர் தொகுதியில் அதிகபட்சம் 20 நாள் தேர்தல் பணிகளில் அக்கரை காட்டிய நிலையில், பா.ம.க., நான்கு மாதம் முகாமிட்டும் வெற்றி என்ற இலக்கோடு தேர்தல் பணியில் இருந்த போதும், இரண்டாவது இடத்தை மட்டுமே அவர்கள் தக்க வைத்தற்கு ஜாதிய ஓட்டுக்கள் சிதறி போனதே காரணம்.
இளைஞர்களை நம்பிய பா.ம.க., : தொகுதியில் பா.ம.க., இரு முறை வெற்றி பெற்றும் மக்களோடு இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை தேடி வரும் போக்கு வன்னியர் மக்கள் பா.ம.க.,வின் மீது வெறுப்பில் இருந்தனர்.வன்னிய இளைஞர்களை மூளை சலவை செய்து ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற பா.ம.க.,வின் எதிர்பார்ப்பும் பெரிய அளவில் கை கொடுக்காமல் போனது பரிதாபமே.